அடியாத்தி! சப்பாத்தி விலை 1 ரூபாய் 65 பைசா... பிரபாவதி

மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஓசூர் பெண்கள் குறைந்த விலையில் சப்பாத்தி  விற்று வறுமையை வென்றிருக்கிறார்கள்

ஒரு சப்பாத்தியின் விலை 1 ரூபாய் 65 பைசா என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் நிஜம்.

ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரிக்கும் சப்பாத்திகள்தான் இவ்வளவு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மகளிர் குழுவினர் தயாரிக்கும் இந்தச் சப்பாத்திகள் ஓசூர் முழுக்க உள்ள கம்பெனிகள், ஓட்டல்கள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு இவர்களால் சுமார் 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களை சந்திக்கச் சென்றோம்.  "கொத்தகொண்டப்பள்ளி பெண்கள் சுய உதவிக்குழுக்கள் கட்டிடம்’ என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி 6 கட்டிடங்கள் கம்பீரமாக நம்மை வரவேற்கின்றன. கட்டிடத்தின் உள்ளே செல்ல முயன்றபோது,  ஒருபெண் தொழிலாளி அவசரமாக ஓடி வந்து, வாசலில் உள்ள சிறிய தொட்டியில் நம் கை, கால்களைக் கழுவச் சொன்னார்.காரணம் புரியாமல் ஏன் என்று கேட்டபோது,  "கிருமிகளை அழிக்கும் பொட்டாசியம் பர்மாங்கனேட், ஸ்டெரிலியம்  போன்ற திரவங்களை, அத்தண்ணீர் தொட்டியில் கலந்துள்ளோம். சப்பாத்தி தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதால் கிருமிகள் வராமல் தடுக்க அனைவரையும் கை, கால்களைக் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிப்போம்" என்று கூறிக்கொண்டே நம்மை சப்பாத்தி தயாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மாவு பிசையும் மெஷினில் மூட்டைகளைப் பிரித்து அதிலிருந்த கோதுமை மாவை கொட்டிக்கொண்டும், பிசைந்த மாவை கைகளால் உருண்டை பிடித்து  சப்பாத்திக் கட்டையால் உருட்டிக்கொண்டும், மற்றொரு அறையில் உருட்டியதை வேகவைத்து, பேக் செய்துகொண்டும் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைவரும் பெண்கள்... பெண்கள்... சப்பாத்தியில் அழுக்கு படக்கூடாது  என்பதற்காக தலைக்குத் தொப்பி, மூக்குக்கு மாஸ்க், கைகளுக்கு க்ளவுஸ் என்று மாட்டிக்கொண்டு யூனிஃபார்ம் சகிதமாக அனைவரும் மிக நேர்த்தியாகக் காட்சியளித்தார்கள்.
இந்த தன்னம்பிக்கைப் பெண்கள் அதிகளவில் படிக்கவில்லை என்றாலும் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளையும் பேசி நம்மை வியக்க வைக்கிறார்கள். அவர்கள் செய்த சப்பாத்தியை சாப்பிட்டபோது மிகுந்த சுவையாகவும், மென்மையாகவும் இருந்தது.

"இங்கு நான் சப்பாத்தியின் தரத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தவிர, வேலை செய்யும் பெண்கள் தங்களது நகத்தை வெட்டியுள்ளார்களா, துணிகளை சுத்தமாகத் துவைத்து அணிந்து  வருகிறார்களா, அறைகளைக் கழுவி விடுகிறார்களா என்று தினமும் செக் செய்து இங்கு சுகாதாரத்தைப் பராமரிக்கிறோம். தரத்துடன், சுகாதாரமாக, சுவையான சப்பாத்திகளை செய்துகொடுத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதுதான் எங்களது நோக்கமே" என்று கூறி முடித்தார்  லீலா என்ற பெண்.
-இணைய செய்தியாளர் - G.S.குரு
நன்றி புதியதலைமுறை