விபத்தில் மாணவர் பலி : பேருந்துக்கு தீவைப்பு

           கிருஷ்ணகிரி மாவட்டம் ஹொசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து, பொதுமக்கள் பேருந்தை தீயிட்டு கொளுத்தினர்.ஒன்னல்வாடி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹொசூர் போலீசார் பேருந்துக்கு தீ வைத்தது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹொசூரில் இருந்து தர்மபுரிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஒன்னல்வாடி பகுதியில் லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரகாஷ் மீது பேருந்து மோதியது. இதில் மாணவர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதி மக்கள், பேருந்திற்கு தீ வைத்தனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்