போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: 4 பேர் கைது

        ஒசூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 9.73 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே முதுகாணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா, வெங்கடரமணப்பா, வெங்கடேசப்பா சகோதரர்கள் தங்களுக்குச் சொந்தமான 9.73 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந் நிலையில், இவர்களது நிலத்தை, கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், பெங்களூரைச் சேர்ந்த ராஜப்பா, ராமப்பா, சாவித்திரியம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து மோசடியாக, வெங்கடேஷுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக மூன்று பேரையும், நிலத்தை வாங்கிய வெங்கடேஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்