ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில், பல்வேறு தொழில் வளங்களைக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி இல்லை என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்டகால ஆதங்கமாகும். இதேபோன்று சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக பெங்களூருவுக்கு மின்சார ரயில் மற்றும் இரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கனிமவளம், மாம்பழம்,ரோஜா என இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி கிடையாது. ஓசூர் வழியாக பெங்களூரு, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தென் தமிழகத்திற்கும்,, சென்னை உள்ளி்ட்ட வட மாவட்டங்களுக்கும் ரயில் வசதி அறவே இல்லாதது அவர்களின் மாபெரும் கவலையாகும்.
ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், ஒரப்பம், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை 101 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையாகும்.
இதேபோல், தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்னவானது எனக் குமுறுகின்றனர் தருமபுரி மாவட்ட மக்கள்... இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் வெறும் 30 கிலோ மீட்டர்தான்.
இதுபோன்று, தஞ்சை -அரியலூர் இடையே ரயில் பாதை அமைக்கப்படும் என முன்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் காற்றோடு கலந்துவிட்டதா? என தஞ்சை மாவட்ட மக்கள் வினவுகின்றனர். இந்த ரயில் பாதை அமைந்தால், தஞ்சை-சென்னை இடையிலான பயண தூரம் குறையும் என கூறுகின்றனர் தஞ்சை மக்கள்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்